சிறப்பாக விளையாடவில்லை என்றால் சம்பளம் குறைப்பு – BCCI அதிரடி
சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என டெஸ்ட் தொடரை இழந்தது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 3-1 என தொடரை இழந்தது என தொடர் தோல்விகளுக்கு பிறகு பிசிசிஐ கடுமையான ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலம் வாய்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளையே சொந்த மண்ணில் அடித்துவிட்டு, அனுபவம் இல்லாத வீரர்கள் அடங்கிய நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தபோது வீரர்களின் அலட்சியமே பிரதான காரணமாக சொல்லப்பட்டது.
இந்த சூழலில் வீரர்களின் அலட்சியம், சரியாக விளையாடாமல் போவது ஆகியவற்றை பின்வரும் தொடர்களில் குறைக்கும் விதமாக, ஆட்டத்தை பொறுத்தே ஊதியம் வழங்கப்படும் முறையை பிசிசிஐ அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்புக்கூட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் இந்திய அணியில் தொடர் தோல்விகள், சாம்பியன்ஸ் டிரோபிக்கான இந்திய மற்றும் ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டனாக செயல்படுவது போன்ற முக்கியமான விசயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
*வீரர்கள் விளையாடும் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் குறைக்கப்படும். அதவால் அவர்களின் ஆட்ட செயல்திறனை பொறுத்தே ஊதியம் வழங்கப்படும்.
* ஐபிஎல் போன்ற பிரான்சைஸ் கிரிக்கெட்டால் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டவில்லை என்பதும், டெஸ்ட் கிரிக்கெட் மீது அலட்சிய போக்கு இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்வதேச வீரர்கள் அனைவரும் உள்நாட்டு போட்டிகளில் விளையாடப்படவேண்டும். அந்தவகையில் விராட் கோலி, சுப்மன் கில், ரிஷப் பண்ட் போன்றோர் விரைவில் ரஞ்சி கோப்பையில் விளையாடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
*வீரர்கள் இனிவரும் தொடர்களில் முழுமையாக குடும்பத்துடன் தங்க முடியாது, குறைந்தபட்சம் 2 வாரங்கள் சேர்ந்து தக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இனி அனைத்து வீரர்களும் அணிக்கான பேருந்தில் மட்டுமே பயணம் செய்யவேண்டும், தனி வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது போன்ற பல அதிரடியான முடிவுகளை பிசிசிஐ எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.