20 தேசிய விளையாட்டு சங்கங்கள் சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு கடிதம்
விளையாட்டு அமைச்சர் சுனில் குமாரவினால் கடந்த ஜனவரி 10 இல் தேசிய ஒலிம்பிக் குழு பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வாவுக்கு தடை விதித்த நிலையில் 20 தேசிய விளையாட்டு சங்கங்கள் சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் கௌன்சிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவில் எழுந்துள்ள தற்போதைய பிரச்சினையில் உடன் தலையிடும்படி அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவில் தற்போது எழுந்துள்ள பிரச்சினையை தீர்த்து அதன் ஜனநாயக செயற்பாட்டை பாதுகாப்பதற்கு அதன் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் தீர்மானங்களை செயற்படுத்துவதற்கு சட்டரீதியில் தலையிடும்படி அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் தனது பணியை இடைநிறுத்தியது தொடர்பில் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க மெக்ஸ்வெல் டி சில்வா திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது.
அமைச்சரின் உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கு அவர் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
மெக்ஸ்வெல் டி சில்வா தனது பணிகளில் ஈடுபடுவது தற்போது தடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கான பணிகளில் ஈடுபடுவதற்கு உப செயலாளர் சந்தன லியனகே கடந்த சனிக்கிழமை (11) தொடக்கம் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போதைய நிலை குறித்து தலையிடக் கோரி சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு கடிதம் எழுதி இருக்கும் 20 தேசிய விளையாட்டு சங்கங்களில் இலங்கை கால்பந்து சம்மேளனம், இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம், இலங்கை பூப்பந்து சங்கம், இலங்கை கரப்பந்து சம்மேளனம் ஆகிவையும் அடங்கும்.
தேசிய ஒலிம்பிக் குழுவில் 29 விளையாட்டு சங்கங்கள் அங்கத்துவம் பெற்றுள்ளன.
2025 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய ஒலிம்பிக் குழுவின் அடுத்த தேர்தலை நடத்துவதற்கு தற்போது தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எனினும் சட்டரீதியில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தலை 2025 நவம்பர் மாதத்திற்கு பின்னரே நடத்த முடியும் என்று தேசிய ஒலிம்பிக் குழுவின் தற்போதைய தலைவர் சுரேஷ் சுப்ரமனியம் தெரிவித்துள்ளார்.