களுத்துறை சிறுமி மரணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
களுத்துறை நகரில் உள்ள விடுதி ஒன்றில் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
களுத்துறை தெற்கிலுள்ள விடுதியொன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்த குறித்த சிறுமி கடந்த 6ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்த மர்ம மரணம் தொடர்பாக, சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் 29 வயதுடைய திருமணமான இளைஞர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியை அழைத்துச் செல்ல உதவியதாகக் கூறப்படும் இளைஞனும், யுவதியொருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதியில் தங்க வைப்பதற்கு முன்னர், சிறுமியின் தேசிய அடையாள அட்டையை சரிபார்க்கத் தவறியதன் காரணமாக அந்த விடுதியின் உரிமையாளரின் மனைவி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில்,பொலிஸ் அதிபர் சி. டி. விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.