சிங்கப்பூருக்கு சென்ற விமானம் அவசர அவசரமாக இந்தோனேசியாவில் தரையிறக்கம்!
சிங்கப்பூருக்கு சென்ற விமானம் அவசர அவசரமாக இந்தோனேசியாவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.
அந்த வகையில், 6E 1007 என்ற எண் கொண்ட விமானம், நேற்று (மே 09) மாலை 06.50 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிகள், விமான ஊழியர்களுடன் புறப்பட்டது.
நடுவானில் விமானம் சென்றுக் கொண்டிருந்த நிலையில், விமானத்தில் ‘கருகிய வாசனை’ வருவதை உணர்ந்த விமான ஊழியர்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, விமானி இந்தோனேசியா நாட்டின் மேடனில் (Medan) உள்ள குலானாமு விமான நிலையத்தில் (Kualanamu Airport) விமானத்தை தரையிறக்குவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி கோரினார்.
அதைத் தொடர்ந்து, அந்த விமான நிலையத்தில் அவசர அவசரமாக விமானத்தை விமானி தரையிறக்கினார். பின்னர், விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த விமான பொறியாளர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.