ஆஸ்திரேலியாவில் வாரக்கணக்கில் எரியப்போகும் பயங்கர காட்டுத்தீ! மக்கள் வெளியேற்றம்
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயானது இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியிலுள்ள ஆயிரகணக்கான மக்கள் அவர்களது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் சுற்றுலான துறை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு மாநிலமான விக்டோரியாவிலுள்ள கிராம்பியான்ஸ் தேசியப் பூங்காவில் கடந்த திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட தீயானது தொடர்ந்து வீசிய காற்றினாலும் அப்பகுதியிலுள்ள அதிக வெப்பத்தினாலும் தொடர்ந்து பரவியது.
மேலும், கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாள்களில் அது மும்மடங்காக பரவியது.
ஏறத்தாழ 300 தீயணைப்பு வீரர்கள் அந்த தீயை அணைக்க போராடி வருவதோடு, ஒரு விமானம் மூலமாகவும் அப்பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தக் காட்டுத்தீயானது தொடர்ந்து சில வாரங்கள்வரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதினால், அந்த தேசியப் பூங்காவைச் சுற்றியுள்ள 6 நகரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வருகின்ற நாள்களில் அப்பகுதியில் மேலும் வெப்பமும், காற்றும் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணிப்பதினால், அந்தக் காட்டுத்தீ இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.