குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பதவியிலிருந்து விலகத் தயார் – நாமல் பகிரங்க சவால்!
தனது கல்வித் தகைமை தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பதவியிலிருந்து விலகத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சட்டப் பரீட்சைக்குத் தாம் முகம் கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டள்ளார்.
இந்த அவமதிப்பு நாமல் ராஜபக்சவை இலக்காகக் கொள்ளவில்லை என்றும், முழுச் சட்ட அமைப்பையும் குறிவைத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச நீதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
குளிரூட்டப்பட்ட அறையில் தனியாகப் பரீட்சை எழுதியது நிரூபிக்கப்பட்டால் சபையிலிருந்து விலகுவதாகவும், அதனை நிரூபிக்க முடியாவிட்டால் அமைச்சர் வசந்த சமரசிங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றில் உரையாற்றிய போது, நாமல் ராஜபக்ச, குளிரூட்டப்பட்ட அறையில் பரீட்சை எழுதியதாகவும், பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வழங்கப்பட்டதாகவும், இணைய வசதியுடன் கூடிய கணனி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், நாமல் ராஜபக்ச முழு அரசியல் பலத்தைப் பயன்படுத்தி சட்டத்தரணியானார் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அந்தவகையில், அமைச்சர் வசந்த சமரசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே, தனது கல்வித் தகைமை தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தான் நாடாளுமன்ற பதவியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.