ஃபிஜியில் உள்ள ஆடம்பர ரிசார்ட் பாரில் மதுபானம் குடித்த ஏழு வெளிநாட்டவர் மருத்துவமனையில் அனுமதி
ஃபிஜிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஏழு வெளிநாட்டினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மதுபானக் கூடத்தில் அவர்கள் அருந்திய மதுபானம் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.நச்சுணவால் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் அந்த ஏழு பேரில் ஐவர் சுற்றுலாப்பயணிகள்.
அவர்களில் ஒருவர் அமெரிக்கர்.மற்ற நால்வர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் அனைவரும் 18 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.பாதிப்பட்ட மற்ற இருவர் ஃபிஜியில் வசிக்கும் வெளிநாட்டினர்.
இந்தத் தகவல்களை ஃபிஜியின் சுகாதார அமைச்சும் அந்நாட்டின் ஊடகமும் தெரிவித்தன.
அந்த ஏழு பேரில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அவர்கள் குணமடைந்து வருவதாகவும் சிலர் வீடு திரும்ப இருப்பதாகவும் டிசம்பர் 16ஆம் திமதியன்று அதிகாரிகள் கூறினர்.
வார்விக் ஃபிஜி ரிசோர்ட்டில் அந்த ஏழு பேரும் மதுபானம் அருந்தியதை அடுத்து, அவர்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதாகவும் அவர்கள் வாந்தி எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ஃபிஜி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.