இந்தோனேசியாவில் 20 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியர்கள் தாயகம் திரும்பினர்!
ஹெராயின் கடத்தலுக்காக சுமார் 20 ஆண்டுகளாக இந்தோனேசிய சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐந்து ஆஸ்திரேலியர்கள் இன்று (15.12) ஆஸ்திரேலியா திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு அரசாங்கங்களுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் ஆஸ்திரேலியா திரும்பியதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.
மாத்யூ நார்மன், ஸ்காட் ரஷ், மார்ட்டின் ஸ்டீபன்ஸ், சி யி சென் மற்றும் மைக்கேல் சுகாஜ் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அரசாங்கங்கள் வாரங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தின.
ஆஸ்திரேலிய சிறைகளில் அவர்கள் ஆயுள் தண்டனையை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து நிச்சயமற்ற நிலை இருந்தது.
இருப்பினும், அல்பானீஸ் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் ஆண்கள் சுதந்திர குடிமக்களாக ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியதாக அறிவித்துள்ளார்.
அவர்களை விடுவித்ததற்காக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.