காஸா போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே ஆலோசனை
காஸா போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை வரைவது குறித்து இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஆராய்ந்து வரும் அறிகுறிகள் தென்படுவதாகச் சொல்லப்படுகிறது.குறைந்தபட்சம் சில அம்சங்களை மட்டுமே கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரைய இருதரப்பும் எண்ணம் கொண்டுள்ளன.
ஓராண்டு காலத்தில் முதல்முறையாக போர் நிறுத்தப்படும் சாத்தியம் எழுந்துள்ளது. பாலஸ்தீனத்தில் வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை மீண்டும் ஒப்படைக்க அது வகைசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் உட்பட பிணைக் கைதிகள் அனைவரையும் ஒப்படைக்க வகைசெய்யும் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட வாய்ப்புள்ளது என்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சரான இஸ்ரேல் கேட்ஸ், அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினிடம் கூறியிருக்கிறார்.கேட்சின் அலுவலகம் அத்தகவலை வெளியிட்டது.
பாதிக்கப்பட்ட வட்டாரத்தில் இருக்கும் மேற்கத்திய அரசதந்திரி ஒருவர், ஒப்பந்தம் வரையப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆனால், அது சில அம்சங்களை மட்டுமே கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறுகிய காலத்துக்கே போரை நிறுத்துவது, சில பிணைக் கைதிகளை மட்டுமே ஒப்படைப்பது உள்ளிட்டவை அத்தகைய அம்சங்களாகும்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஸா போர் தொடங்கியதிலிருந்து ஒருமுறை மட்டுமே அத்தகைய ஒப்பந்தம் வரையப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதியன்று தாம் பதவியேற்பதற்கு முன்பு பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸ் அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, காஸா போரை நிரந்தரமாக, நிபந்தனையின்றி உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதற்குச் சாதகமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உறுப்பினர்களில் பெரும்பாலோர் வாக்களித்துள்ளனர். உடனடியாக எல்லா பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதன்கீழ் வரும் நிபந்தனைகளில் அடங்கும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 193 உறுப்பு நாடுகள் மற்றும் வட்டாரங்களின் 158 உறுப்பினர்கள், போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துமாறு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கேட்டுக்கொண்டது. பிறகு சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் போரை நிறுத்துமாறு சபை எடுத்துரைத்தது.
இப்போது சபை எழுப்பும் போர் நிறுத்தத்துக்கான குரல் அவற்றைவிட தீவிரமானது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது என்று சிஎன்ஏ போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.