காங்கோ குடியரசில் மர்ம நோய் – விமான பயணிகளை சோதனையிடும் ஹொங்கொங்
ஆப்பிரிக்காவிலிருந்து ஹொங்காங் வரும் விமானப் பயணிகளுக்கு தீவிர சுகாதார பரிசோதனையை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மர்ம நோயொன்று காங்கோ குடியரசில் 79 பேரின் உயிரைப் பறித்ததாக செய்தி வெளியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதைப் பற்றி உலகச் சுகாதார நிறுவனத்திடம் தகவல் கேட்டதாக அந்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்திலிருந்து மர்ம நோய் காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் 15 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, சலி, இருமல், மூச்சுத் திணறல், ரத்த சோகை முதலிய அறிகுறிகள் தென்பட்டன.
ஹொங்காங்கிற்குள் வரும் பயணிகளுக்கு மர்ம நோய் இருப்பதைப் பற்றித் தகவல் இல்லை என்று உள்ளூர் அரசாங்கம் தெரிவித்தது.
காங்கோவிலிருந்து ஹொங்காங் செல்ல நேரடி விமானங்கள் இல்லையென்றாலும் ஆப்பிரிக்க நகரங்களின் வழியாக விமானங்கள் வருகின்றன.
அவற்றில் மருத்துவப் பரிசோதனை விரிவுபடுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.