டீ – காபி அதிக சூடாக குடிப்பவரா நீங்கள்…? புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்
ஒரு கப் சூடான தேநீர் அல்லது காபி என்பது சோர்வை விரட்டும் அருமருந்தாக கருதப்படுகிறது. சோர்வு அல்லது மந்தமாக உணர்ந்தால், ஒரு கப் காபி அல்லது டீ குடிக்கலாம் என நினைக்காதவர்களை பார்ப்பது அரிது. கையில் ஒரு கோப்பை சூடான பானத்துடன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அரட்டை அடிப்பது என்பது நமக்கு புத்துணர்ச்சி தரும் ஒரு பணியாகும். ஆனால், இதே டீ அல்லது காபி அளவிற்கு அதிகமான சூட்டில் அருந்துவதால், உங்கள் ஆரோக்கியத்திற்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறக் கூடும் என்றால் நம்ப முடிகிறதா… ஆனால், அது தான் உண்மை
சூடான டீ அல்லது காபியினால் ஏற்படும் பக்க விளைவுகள்
ஆம், அளவிற்கு அதிகமான சூடான டீ அல்லது காபி குடிப்பதால் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் ஆபத்தை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று காட்டுகிறது. தேநீர் மற்றும் காபி போன்ற பானங்கள்ளை அதிக சூடாக குடிப்பதால், வாய், உணவுக்குழாய் மற்றும் தொண்டை புற்றுநோய் உண்டாகும் வாப்பு அதிகம் உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. எனவே, ஒரு கோப்பை டீ அல்லது காபியை கையில் வைத்திருக்கும் போது, அதன் வெப்பநிலை நமது ஆரோக்கியத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் (Health Tips) என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
சூடான பானங்களும் புற்றுநோய் பாதிப்பும்
சூடு அதிகம் உள்ள பானங்கள் நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக நமது செரிமான அமைப்பில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சூடான பானங்களின் அதிக வெப்பநிலை, நமது செரிமான அமைப்பில் உள்ள செல்களைப் பிரித்து சரி செய்யும் செயல்முறையை பாதிக்கும். என்றும், இதனால் உணவுக்குழாய் அழற்சி (தொண்டையில் வீக்கம்) மற்றும் டிஸ்ப்ளாசியா (உயிரணுக்களில் அசாதாரண மாற்றங்கள்) போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இது புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
உணவுக்குழாய் புற்றுநோய் ஆபத்து
சூடான பானங்களை உட்கொள்வது உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். சூடான பானங்களின் அதிக வெப்பநிலை தொண்டை புற்றுநோய்க்கு பங்களிக்கிறது. குறிப்பாக புகைபிடித்தல், ஆல்கஹால் மற்றும் மோசமான உணவு போன்ற பிற ஆபத்து காரணிகளுடன் இணையும் போது, அதன் ஆபத்து பல மடங்கு அதிகரிக்கிறது. இருப்பினும், நம் அருந்தும் பானங்களின் வெப்பநிலையை கருத்தில் கொண்டால், இந்த ஆபத்துகள் குறைக்கப்படலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
குளிர்காலத்தில் சூடான பானங்களை அனுபவிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் அவற்றின் வெப்பநிலை உங்கள் செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மிதமான வெப்பநிலையில் பானங்களை உட்கொள்வது சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.