இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை – 6 பேர் பலி : 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 21 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் 98 ஆயிரத்து 635 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 30 ஆயிரத்து 894 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை 2.30 அளவில் திருகோணமலையில் இருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து வடக்காக நகர்வதாகவும் இன்றைய தினத்துக்குள் அது புயலாக வலுவடையக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.