250 மில்லியன் டொலர் லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
லஞ்சம் வழங்க முயன்றதாக உலகப் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
சூரிய எரிசக்தி தொடர்பான ஒப்பந்தங்களைக் கைப்பற்றும் நோக்கில் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் (S$336 மில்லியன்) அதிகமான லஞ்சம் கொடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் அவர் ஈடுபட்டதாக நியூயார்க் நகரின் புரூக்லின் பகுதியைச் சேர்ந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நவம்பர் 20ஆம் திகதியன்று தெரிவித்தனர்.
இத்திட்டம் தொடர்பாக பொய்யுரைத்து, அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து பணம் பெற அதானியும் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மற்றவர்களும் முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாகிகளான சாகர் ஆர். அதானி, வினீத் எஸ். ஜெயின் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதானி குழுமம் லஞ்சம் வழங்கியதா என்பதை கண்டறிய அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அதானி நிறுனத்தின் செயல்பாடுகள், நடத்தை ஆகியவை ஆராயப்பட்டன.
எரிசக்தி ஒப்பந்தத்தைப் பெற இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் குறித்து அதானி குழுமத்தின் அமெரிக்க அலுவலகம் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை என்று புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மின்ஆதாரங்களை நீக்கி விசாரணைக்கு இடையூறு விளைவிக்க திட்டம் தீட்டியதாக மேலும் நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.