அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் மரணம்
டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், சனிக்கிழமை இரவு, பொது மக்களை நோக்கி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் பலியானார்.
இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகினர், மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், உயிரிழந்தவர்களில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஐஸ்வர்யா தட்டிகொண்டா(வயது 27) என்பவரும் ஒருவராவார்..
ஐதராபாத் சரூர்நகரை சேர்ந்த மாவட்ட நீதிபதி தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஐஸ்வர்யா, கடந்த இரண்டு ஆண்டுகளாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
விடுமுறை நாளன்று நண்பருடன் வணிக வளாகம் சென்ற நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில், ஐஸ்வர்யாவின் நண்பர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும், அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட ஐஸ்வர்யாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவில் நீதிபதியின் மகள் துப்பாக்கிச்சூட்டிற்கு இரையாகி இருப்பது ஐதராபாத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் எந்தவித பயிற்சியும், உரிமமும் இன்றி யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி உள்ளதால், துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.