ஒரே நாளில் 5 லட்சம் பயணிகளை ஏற்றி சாதனை படைத்த இந்திய விமானப் போக்குவரத்து
இந்திய விமானத் துறையின் சாதனையாக, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) ஒரே நாளில் 500,000 பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர் என விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 500,000 பேர் பயணம் செய்திருப்பது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நவம்பர் 8ஆம் திகதி 490,000 பேரும் நவம்பர் 9ஆம் திகதி 496,000 பேரும் பயணம் செய்துள்ளனர். நவம்பர் 14ஆம் திகதி 497,000 பேர், நவம்பர் 15ஆம் திகதி 499,000 பேர், நவம்பர் 16ஆம் திகதி 498,000 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 3,161 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. இது முந்தைய மாதத்தைவிட ஒரு நாளைக்கு 8 விமானங்கள் அதிகம் என்று அதன் அறிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதையும் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரித்து வருவதையும் இது காட்டுகிறது.
2023ஆம் ஆண்டில் 153 மில்லியனாக இருந்த இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2030 முதல் ஆண்டுதோறும் 300 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வியாழக்கிழமை (நவம்பர் 14 ) அதனைத் தெரிவித்தார்.