ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ள பங்ளாதேஷ்
நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்புமாறு சம்பந்தப்பட்ட நாட்டிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்று பங்ளாதேஷின் இடைக்காலத் தலைவர் முகம்மது யூனுஸ் தெரிவித்து உள்ளார்.
பங்ளாதேஷ் மக்களின் புரட்சி காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியைத் துறந்து நாட்டிலிருந்து வெளியேறிய ஹசினா, 77, அண்டை நாடான இந்தியாவிற்குத் தப்பி ஓடினார்.ஆகக் கடைசியாக, அங்கு அவர் ஹெலிகாப்டரில் இறங்கியதைக் காணமுடிந்தது.
பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பங்ளாதேஷ் இடைக்கால நிர்வாகம், ஹசினாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது.
ஏராளமானோரைக் கொன்ற குற்றத்துடன் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக நவம்பர் 18ஆம் திகதி தலைநகர் டாக்காவில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு ஏற்கெனவே அழைப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது.
போராட்டங்களை ஒடுக்கிய குற்றத்தில் ஈடுபட்டோர் அதற்கான தண்டனையை எதிர்நோக்க வேண்டும் என்பதில் தமது அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக யூனுஸ்(84), தெரிவித்து உள்ளார்.
ஹசினா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.முன்னாள் பிரதமர் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுகள் அவர்கள் மீதும் சுமத்தப்பட்டு உள்ளன.அவற்றை எதிர்கொள்ள அவர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நீடித்த படுகொலைகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காணாமல் செய்தல் போன்றவற்றுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்,” என்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) யூனுஸ் கூறினார்.
இடைக்கால நிர்வாகம் பொறுப்பேற்று 100 நாள்கள் நிறைவடைந்த நிலையில் நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றினார்.ஹசினாவை நாடு கடத்துவது தொடர்பில் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரிம் கானிடம் தாம் பேசியுள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.“பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட எதேச்சதிகாரியை நாடுகடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்போம்,” என்றார் யூனுஸ்.