மணிப்பூரில் அதிகரித்துள்ள பதற்றம்; முதல்வர்,அமைச்சர் வீடுகளுக்குத் தீ வைப்பு
வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே ஈராண்டுகளாக மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.அந்த மோதல்களில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகள் ஆயினர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது, அங்குள்ள நிவாரண முகாமில் இருந்த மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகளைக் காணவில்லை.
அதைத் தொடர்ந்து அந்த ஆறு பேரும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக மைத்தேயி அமைப்புகள் குற்றஞ்சாட்டின. ஆறு பேரின் கதி என்னவென்று தெரியாததால் சில நாள்களாக மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், காணாமற்போன ஆறு பேரும் கொல்லப்பட்டு இரண்டு ஆறுகளில் சடலமாக வீசப்பட்டனர். அதனைக் கண்டு கொதிப்படைந்த மைத்தேயி இன மக்கள், பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொல்லப்பட்டவா்களுக்கு நீதி கேட்டு, மணிப்பூரின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் சனிக்கிழமை பெரும் போராட்டம் வெடித்தது.
தலைநகர் இம்பாலில் முதல்வர் பைரேன் சிங்கின் மூதாதையர் வீடு, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வீடுகளைத் தாக்கியும் தீ வைத்தும் அந்த மக்கள் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.அதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. எந்த நேரத்திலும் வன்முறை பெரிய அளவில் உருவெடுக்கலாம் என்னும் நிலை உள்ளதால் இணையச்சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி சமூகத்தினா் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான முக்கிய காரணமாகும்.
மணிப்பூரில் நிகழ்ந்துள்ள சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்திய அரசுதான் முடிவு கட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மணிப்பூர் மாநிலத்துக்கு நேரில் சென்று பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்,” என்று வலியுறுத்தி உள்ளார்.