நைஜீரிய ஆர்ப்பாட்டம் – இளைஞர்கள் 29 பேருக்கு மரண தண்டனை வழங்க வாய்ப்பு
நைஜீரியா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளதால், அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாத சூழலில் மக்கள் உள்ளனர்.
இந்நிலையில், வாழ்வாதாரம் மேம்படவேண்டும் என்று கோரி, நைஜீரிய இளைஞர்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தீவிர ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள்மீது நைஜீரிய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 20 பேர் உயிரிழந்ததோடு, 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 29 இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.அவர்கள் அனைவரும் 14 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்மீது தேசத் துரோகம், கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அந்த இளைஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நைஜீரியாவில் 1970களில் மரண தண்டனை அறிமுகமானது. ஆனால், 2016ஆம் ஆண்டுமுதல் மரண தண்டனை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், குழந்தை உரிமைகள் சட்டப்படி 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு மரண தண்டனை வழங்க முடியாது என்று வழக்கறிஞர் அகிந்தயோ பலோகன் தெரிவித்துள்ளார்.
தற்போது, அந்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் 10 மில்லியன் நைரா ($5,900) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கடும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் மார்ஷல் அபுபக்கர் கூறினார்.
“குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் கடமை உள்ள நாடு ஒன்று, அவர்களைத் தண்டிக்க முடிவெடுக்கும். இந்த இளைஞர்கள் உணவின்றி 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்,” என்று அபுபக்கர் கூறினார்.