போரில் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான ‘அயர்ன் பீம்’மை பயன்படுத்த இஸ்ரேல் திட்டம்
இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பில் அயர்ன் பீம் எனப்படும் புதிய லேசர் தொழில் நுட்பம் கொண்ட ஏவுகணை தடுப்பு அமைப்பை விரைவில் இணைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த அயர்ன் பீம் என்பது ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி தாக்குதல்களை வானிலேயே இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது. இத்தகைய சூழலில் தான் புதிய லேசர் டெக்னாலஜியுடன் கூடிய அயர்ன் பீம் கருவியை இஸ்ரேல் கொண்டு வர உள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், “புரெஜெக்டைல் (பீரங்கிகளால் ஏவப்படும் ஆயுதங்கள்) போன்றவற்றை வீழ்த்த இந்த அதி நவீன சக்தி வாய்ந்த அயன் பீம் கருவி பயன்படுத்தப்படும்.
ஒராண்டிற்குள் இந்த லேசர் ஆயுதம் பயன்பாட்டுக்கு வரும். போரின் புதிய சகாப்தமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 500 மில்லியன் டொலர் மதிப்பு கொண்ட இந்த லேசர் அயன் பீம் ஏவுகணைகள், டிரோன்கள், ராக்கெட்டுகள், மோர்ட்டார்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் திறன் கொண்டது.
ஒளியின் வேகத்தில் லேசர்களை பாய்ச்சும் திறன் கொண்ட இந்த அயர்ன் பீம் ஆயுதம், டிரோன்கள் உள்ளிட்டவற்றை வெப்பப்படுத்தி அழிக்கும் ஆற்றல் கொண்டது என இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், தெளிவாக பார்க்க முடியாத கால சூழல்களின் போதும், மோசமான வானிலை சமயத்திலும் இதை பயன்படுத்த முடியாதாம்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் எனக்கூறியுள்ள இஸ்ரேல், காசா மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.