இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்ட இருவர் கைது
இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தந்தை மாலைத்தீவு பிரஜை எனவும் தாய் இலங்கை பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறுகம்பே பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பகமான தகவல்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நேற்று தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பின் அடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை பல நாடுகள் புதுப்பித்துள்ளன.
இதற்கிடையில், தற்போதுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத் தலங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் தனது குடிமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதன்படி, இலங்கையின் அருகம் வளைகுடா பகுதி மற்றும் தீவின் தெற்கு மற்றும் மேற்கில் அமைந்துள்ள மற்ற கடற்கரைகளில் ஏதேனும் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.