தென் கொரியாவுக்கு 20 குப்பை பலூன்களை அனுப்பி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வட கொரியா
தென் கொரியாவுக்கு குப்பைகள் கட்டப்பட்ட பெரிய அளவிலான 20 பலூன்களை வட கொரியா மீண்டும் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை குப்பைகள் கட்டப்பட்ட பலூன்கள் எல்லையில் அனுப்பப்பட்டதாகவும், பலூன்களில் காகிதம் போன்ற வீட்டுக் கழிவுகள் இருந்ததாகவும் தென் கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அந்த பலூன்களில் அபாயகரமான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூட்டுப் பணியாளர்கள் கூறியதாக யோன்ஹப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
3 முதல் 4 மீட்டர் நீளம் கொண்டு அந்த பலூன்கள் சியோர்வோனில் கண்டெடுக்கப்பட்டதாக தென் கொரிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கொரிய போருக்குப் பிறகு அமெரிக்காவும் தென் கொரியாவும் நடத்திவரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா எதிா்ப்பு தெரிவித்துவருகிறது. அந்த எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது வட கொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுவருகிறது.
ஏற்கெனவே, இதே போன்ற நூற்றுக்கணக்கான பலூன்களை வட கொரியா கடந்த மே மாதத்தில் அனுப்பியது நினைவுகூரத்தக்கது.