இந்திய பயணிகளுக்காக UAE அறிமுகம் செய்துள்ள விசா-ஆன்-அரைவல் ; தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்
ஐக்கிய அமீரகம் செல்லும் இந்தியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் புதிய விசா முறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் தகுதியான இந்தியர்கள் ஐக்கிய அமீரகத்திற்கு நேரடியாகச் சென்று ஆன் அரைவல் விசாவை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அறிவிப்பை ஐக்கிய அமீரகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் அல்லது எந்த ஐரோப்பிய யூனியன் நாட்டிலிருந்தும் செல்லுபடியாகும் நிரந்தர குடியுரிமை அட்டை அல்லது விசா வைத்திருப்போர் அன் அரைவல் மூலம் விசா எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய முறையில் தகுதியான இந்தியர்கள் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்றவுடன் 14 நாள் ஆன் அரைவல் விசா எடுத்துக் கொள்ளலாம்.
இந்திய குடிமக்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிக்கான தேவைகளை ஆணையம் கோடிட்டுக் காட்டியுள்ளது,
*அமெரிக்காவால் வழங்கப்பட்ட விசா, ரெசிடென்ஸ் பெர்மிட் அல்லது கிரீன் கார்டு வைத்திருக்க வேண்டும்.
*அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடு அல்லது பிரிட்டன் வழங்கிய விசா அல்லது ரெசிடென்ஸ் பெர்மிட் வைத்திருக்க வேண்டும்.
*குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இந்த கண்டிஷன்களை பூர்த்தி செய்யும் பயணிகள் ஆன் அரைவல் முறையில் 14 நாள் விசா வழங்கப்படும். தேவையான கட்டணங்களைச் செலுத்தினால் இந்த விசாவை 60 நாட்கள் வரை நீட்டிக்கலாம்.
இது இந்தியர்களுக்கு ஐக்கிய அமீரக பயணத்தை எளிதாக்குகிறது. மிகவும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது. இந்த மாற்றம் மூலம் இந்தியச் சுற்றுலாப் பயணிகள், பிஸ்னஸ்மேன்கள் பெரியளவில் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.