இலங்கையில் பல பகுதிகளில் கொள்ளை மற்றும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவர் தொடர்பில் வௌியான தகவல்!
பல பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்தி, வீடுகளுக்குள் புகுந்து பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் வயோதிபப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் தொம்பே, வெலிவேரிய மற்றும் மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து வீடுகளை கொள்ளையடித்து வருவதாக ஆரம்ப கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆறு நாள் நடவடிக்கையைத் தொடர்ந்து, மல்வத்து ஹிரிபிட்டிய காவற்துறையினர், அப்பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் திருடித் தப்பிச் செல்லும்போது சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
அவிசாவளை, கிரில்ல மற்றும் எஹலியகொட பிரதேசங்களிலும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், கொள்ளைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பல ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான 21 வயதுடைய இளைஞன் தனது மாமாவுடன் இணைந்து இந்த கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் கைத்தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்ட பல திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டி.ஐ.ஜி நிஹால் தல்துவ, “இதற்கு ஒரு ஆண் மட்டுமே இருக்கும் வீடுகளை தேர்வு செய்கிறார்கள்.. பெரிய காணியில் தனி வீடாக இருக்கும் வீடுகளையும் தேர்வு செய்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் அங்கு வசிப்பவர்களின் ஆடைகளை அகற்றி சந்தேகநபர்கள் நிர்வாணமாக்குகின்றனர். . பின்னர் குடியிருப்பாளர்களுக்கு முன்னால் வைத்து பெண்களை பலாத்காரம் செய்கின்றனர்.”
இந்த சந்தேக நபர்கள் நாடு முழுவதிலும் பல பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.