ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு
ஹிஸ்புல்லாக்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய ட்ரோன் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு நடுவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.
கடந்த 27ம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஹிஸ்புல்லாக்கள் மத்திய இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 வீரர்கள் இறந்ததாகவும், 7 பேர் தீவிர காயமடைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப் படுத்தியுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலில் 61 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய மீட்புக் குழுக்கள் தெரிவித்திருந்த நிலையில், ராணுவ வீரர்கள் உயிரிழப்பை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில் ‘போருக்குத் தயார்’ என்று ஈரான் அறிவித்துள்ளது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது.