இலங்கையில் 100 முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் முக்கிய உத்தரவு
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை (பிஸ்டல்) உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு துப்பாக்கிகளை பெற்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளது.
ஏறக்குறைய 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு துப்பாக்கியைப் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் இல்லாதொழிக்கப்படும்.
இதனால் நாடாளுமன்ற கொடுப்பனவு, ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், எரிபொருள் வசதி மற்றும் முத்திரை கட்டண வசதி இழக்க நேரிடும்.
எவ்வாறாயினும், மாதிவெல குடியிருப்பு வளாகத்தில் இருந்து உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளை மட்டுமே பொது தேர்தல் நாள் வரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலில் மீண்டும் தெரிவு செய்யப்படாத அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் முடிந்த அன்றே தமது அலுவலகங்களை ஒப்படைக்க வேண்டும்.