அஸ்வின், முகமது ஷமி.. சிஎஸ்கே நிர்வாகம் போடும் மெகா திட்டம்
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது ஷமி இருவரையும் வாங்குவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் தீவிரமாக காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான காரணமும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடக்கவுள்ள மெகா ஏலத்திற்கான விதிமுறைகளை பிசிசிஐ விரைவில் வெளியிடவுள்ளது.
இதனிடையே மெகா ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் அணிகளால் 5 வீரர்களை ரிடென்ஷன் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று, ஆர்டிஎம் வாய்ப்புகள் அளிக்கப்படாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக 4 ரீடென்ஷன் மற்றும் 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை பிசிசிஐ வழங்கியது.
இதன் மூலமாக 6 வீரர்களை ஒவ்வொரு அணியாலும் தக்க வைக்க முடிந்தது.
ஆனால் இம்முறை 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பலரும் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனிடையே சிஎஸ்கே அணி தரப்பில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் பதிரானா ஆகியோரை தக்க வைத்த பின், கடைசி வீரராக தோனியை தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன் மூலமாக தோனிக்கு குறைந்த சம்பளம் கொடுத்தாலே போதும் என்பதோடு, ருதுராஜ் மற்றும் ஜடேஜாவுக்கு சமமான ஊதியத்தை அளிக்க முடியும்.
இதனால் மெகா ஏலத்தை நோக்கி சிஎஸ்கே அணி நிர்வாகம் பணியாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த சீசனில் இந்திய வேகப்பந்துவீச்சாளரான தீபக் சஹரை வாங்குவதற்கு ரூ.14 கோடி வரை சிஎஸ்கே அணி கொடுத்தது.
ஆனால் தீபக் சஹர் ஒரு ஆண்டின் 70 சதவிகித நாட்களில் காயம் என்று சொல்லிவிட்டு, பயிற்சியில் கூட ஈடுபடுவதில்லை.
இதனால் இம்முறை தீபக் சஹருக்கு பதிலாக வேறு வீரரை வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக உள்ளது.
இந்தப் பட்டியலில் முதன்மையாக இருக்கும் பெயர் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி தான்.
ஏனென்றால் பவர் பிளே ஓவர்களில் முகமது ஷமியின் பவுலிங்கில் அட்டகாசமாக இருந்து வருகிறது.
இவரின் ஸ்விங்கை தாக்கு பிடிக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.
குஜராத் அணி முகமது ஷமியை விடுவித்தால், பெரிய தொகை கொடுத்து வாங்க ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது.
ஏனென்றால் டெத் ஓவர்களில் பதிரானாவும், பவர் பிளேவில் முகமது ஷமியும் வீசினால் சிஎஸ்கே அணியின் பவுலிங் வேறு லெவலில் இருக்கும்.
அதேபோல் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணியுடன் பயணித்த அஸ்வினை மீண்டும் அணிக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை விடுவித்தால், இம்முறை அவரை வாங்க சிஎஸ்கே அணி அதீத ஆர்வம் காட்டும்.
ஏனென்றால் தமிழ்நாட்டின் பெருமையாக பார்க்கப்படும் அஸ்வின், தனது கடைசி ஐபிஎல் போட்டியை சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார்.
இதனால் சிஎஸ்கே சிஇஒ காசி விஸ்வநாதன் இம்முறை அஸ்வினை விடக் கூடாது என்று தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.