கடும் வறட்சி ; மக்களுக்காக 200 யானைகளை கொல்லும் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா
கடும் வறட்சியால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே நாட்டின் வனத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
தென் ஆப்பிரிக்க தேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது. இதில் 83 யானைகளும் அடங்கும்.
அந்த காட்டுயிர்களின் இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க திட்டம். இந்தச் சூழலில் ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவும் நமீபியா வழியில் அதே திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அந்த வகையில் தேவைப்படுபவர்கள் யானைகளை வேட்டையாடலாம். அதற்கான அனுமதி வழங்கப்படும். அதேபோல அரசு தரப்பிலும் மக்களுக்கு இறைச்சி வழங்கப்படும் என ஜிம்பாப்வே தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை மனித மற்றும் மிருகங்கள் மோதல் அதிகம் நடைபெறும் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வனங்களில் செயல்படுத்த திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதி விரைந்து வழங்கப்பட உள்ளதாம். ஏனெனில், இங்கு அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக நீர் மற்றும் உணவு தட்டுப்பாடு நிலவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும். அதற்கு போதுமான வாழ்விடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜிம்பாப்வே நாட்டின் ஹ்வாங்கே பகுதியில் சுமார் 45,000 யானைகள் தற்போது உள்ளதாகவும். அந்த இடத்தில் 15,000 யானைகள் மட்டுமே வாழ்வாதற்கான வன பரப்பு இருப்பதாகவும் டினாஷே ஃபராவோ தெரிவித்துள்ளார்.