பாகிஸ்தானில் அரச ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை
அரச ஊழியர்கள் அனைவரும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவொன்று பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகத் தகவல்கள் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் நடத்தைகள் குறித்து 1964 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அரசாங்கத்தின் நற்பெயரை பாதிக்கும் கருத்துக்களையோ உண்மைகளையோ அரசு ஊழியர்கள் வெளிப்படுத்த முடியாது’ என்றும், அரசின் கொள்கை, முடிவுகள், தேசிய இறையாண்மை மற்றும் கண்ணியத்துக்கு எதிராகப் பேச ஊழியர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி சமூக ஊடக தளங்களில் பொது ஊழியர்கள் தங்கள் கருத்துகளையோ அல்லது சொல்லாட்சிகளையோ பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாணையின்படி, அரசு ஊழியர் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் தகவல்களை தொடர்பில்லாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. மற்ற நாடுகளுடனான பாகிஸ்தானின் உறவுகளை பாதிக்கும் வகையில் ஊழியர்கள் ஊடகங்களில் பேச முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த குறிப்பில், ‘அரசு ஊழியர்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் விவாதிப்பதைக் காணலாம். வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களின் நேர்மறையான பயன்பாட்டைத் தடைசெய்யும் நோக்கம் கொண்டவை அல்ல.
குறிப்பாணையின்படி, ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை அகற்ற நிறுவனங்கள் தங்கள் சமூக ஊடக தளங்களை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அந்த குறிப்பாணையில், ‘அனைத்து சேவைகள் மற்றும் குழுக்களின் அரசு ஊழியர்கள் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். மீறினால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது முறைகேடு நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், துறைகளின் தலைவர்கள், தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் இந்த குறிப்பாணையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.
அரச ஊழியர்கள் அந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அரச ஊழியர்கள் அனுமதியின்றி எந்தச் சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.