ஜெர்மன்: மியூனிக் இஸ்ரேலிய தூதரகத்துக்கு வெளியே சந்தேக நபர் ஒருவர் சுட்டுக் கொலை
ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கும் நாட்ஸி வரலாற்றுக் அருங்காட்சியகத்துக்கும் அருகே வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 5) துப்பாக்கி ஏந்தியிருந்ததுபோல் தெரிந்த நபர் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜோச்சிம் ஹர்மான் தெரிவித்துள்ளார்.
“காவல்துறையினர் தலையிட்டதால் தாக்குதல்காரர் தடுக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கக்கூடும்,” என்று ஹர்மான் செய்தியாளர்களிடம் கூறினார்.
மியூனிக் காவல்துறைப் பேச்சாளர் ஒருவர், “அவர் (சந்தேக நபர்) ஓர் ஆண். அவர் நீளமான துப்பாக்கியை வைத்திருந்தார்,” என்று தெரிவித்தார்.
மியூனிக்கில் வேறு எந்த சந்தேப நபர்கள் இருப்பதாகவோ சம்பவங்கள் இடம்பெற்றதாகவோ அறிகுறிகள் இல்லை என்று மியூனிக் காவல்துறையினர் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்தனர். இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
சம்பவம் குறித்த மேல்விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
மியூனிக்கில் 1972ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றன. அந்த விளையாட்டுகளில் துப்பாக்கி ஏந்திய பாலஸ்தீன தாக்குதல்காரர்கள் 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்றனர்.
அந்தத் தாக்குதலின் ஆண்டு நிறைவு நாளான்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆண்டு நிறைவை அனுசரிக்க வியாழக்கிழமையன்று இஸ்ரேலிய தூதரகம் மூடப்பட்டிருந்ததாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.