ஆஸ்திரேலியாவில் கேளிக்கை பூங்காவில் பராமரிப்பாளரைத் தாக்கிய புலி!
ஆஸ்திரேலியாவின் ‘டிரீம்வொர்ல்ட்’ கேளிக்கைப் பூங்காவில் விலங்குப் பராமரிப்பாளர் ஒருவர் புலியால் தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அவசரநிலை பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்கைகளில் கடுமையாகக் காயமுற்ற அந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.அவரின் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளபோதும், அவர் சீரான நிலையில் இருப்பதாக குவீன்ஸ்லாந்து அவசர மருத்துவ வாகனச் சேவை கூறியது.
“கேளிக்கை பூங்காவில் உள்ள புலி ஒன்றும் பயிற்சி பெறப்பட்ட புலிப் பராமரிப்பாளர் ஒருவரும் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று நடந்திருப்பதை ‘டிரீம்வொர்ல்ட்’ அறிகிறது,” என்று கேளிக்கைப் பூங்கா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
“மாதிற்கு ஆதரவு வழங்குவதே ‘டிரீம்வொர்ல்டின்’ உடனடி நோக்கம். இது தனிப்பட்ட, அரிதான ஒரு சம்பவம். நாங்கள் விரிவான தகுந்த மறுஆய்வை மேற்கொள்வோம்,” என்று அது கூறியது.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்டில் அமைந்துள்ள ‘டிரீம்வொர்ல்டு’, அந்நாட்டின் ஆகப் பெரிய கேளிக்கைப் பூங்காவாகும்.அந்தக் கேளிக்கைப் பூங்காவில் உள்ள ‘புலி தீவில்’ ஒன்பது ‘சுமத்ரா’, ‘பெங்கால்’ புலிகள் உள்ளன.
முன்னதாக 2016ஆம் ஆண்டில், அங்குள்ள சவாரி ஒன்று பழுதானதில் நால்வர் உயிரிழந்தாதாக தெரிவிக்கப்பட்டது.