இலங்கை: காட்டு யானையை எரித்து புதைத்த நபர் கைது!
காட்டு யானையைக் கொன்று குழியில் எரித்த சந்தேகத்தின் பேரில் 47 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நிக்கவெரட்டிய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பன்றிகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சார கம்பியில் சிக்கி சில நாட்களுக்கு முன்னர் காட்டு யானை உயிரிழந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
நிக்கவரெட்டிய பகுதியில் உயிரிழந்த குறித்த யானையை, காணியின் உரிமையாளரான 47 வயதுடையவர் பாகங்களாக வெட்டி, அதனை எரியூட்டியதன் பின்னர் புதைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நிக்கவெரட்டிய கொடுவட்டவல பிரதேசத்தில் தனியார் காணியில் உயிரிழந்த காட்டு யானையின் பாகங்கள் எரிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த காணியின் உரிமையாளர் குருநாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். விலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக பொறிகளை பயன்படுத்தி யானையை கொன்றது மற்றும் கொலையை மறைத்தமை உட்பட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட உள்ளன.
இறந்த காட்டு யானையின் உடலை மின்சார ரம்பத்தால் பகுதிகளாக வெட்டி பின்னர் புதைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காட்டு யானையின் உடல் பாகங்கள் நேற்று (30) பேக்ஹோ இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் இசுரு ஹேவகொத்தவின் அறிவுறுத்தலின் பேரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உயிரிழந்த காட்டு யானை 7-8 அடி உயரமுள்ள விலங்கு என விசாரணையில் தெரியவந்துள்ளது.