தாய்லாந்தில் சுரங்கப் பாதையில் சிக்கி 3 வெளிநாட்டு தொழிலாளர்கள் பலி
தாய்லாந்தில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சுரங்கப்பாதை தாய்-சீன அதிவேக இரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாகும். பாங்காக்கிலிருந்து வடகிழக்கே 250 கிலோமீட்டர் (155 மைல்) தொலைவில் உள்ள நாகோன் ராட்சசிமா மாகாணத்தில் இந்த சுரங்கப்பாதை உள்ளது.
அத்தொழிலாளர்கள் சுரங்கப் பாதையில் வேலை செய்துகொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இரண்டு சீனர்களும் மியன்மாரைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது, ஆனால் பல நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள பூமி குறிப்பாக கனமாக மாறியதாகத் தெரிகிறது என்று துணை போக்குவரத்து அமைச்சர் சுரபோங் பியாசோட் திங்களன்று கூறியதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.