கடவத்தையில் சட்டவிரோத வெளிநாட்டு மதுபான ஆலை சோதனை – இருவர் கைது
சிங்கப்பூர் பிரஜை ஒருவரால் நடத்தப்பட்ட சட்டவிரோத போலி வெளிநாட்டு மதுபான ஆலையொன்றை பியகம கலால் விசேட அதிரடிப் பிரிவினர் கடவத்தையில் சோதனையிட்டதன் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவத்தை மஹர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணிசமான காலமாக இந்த மதுபான ஆலை இயங்கி வந்தமை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் ஊடாக அம்பலமாகியுள்ளது.
இந்த தகவலின் பேரில், பியகம கலால் சிறப்பு அதிரடிப் பிரிவினர் அந்த வளாகத்தை விரைந்து சோதனை செய்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து, போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, 54 போலி வெளிநாட்டு விஸ்கி போத்தல்கள், இரண்டு போத்தல் சீல் இயந்திரங்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய பெருமளவிலான பொருட்கள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பியகம கலால் விசேட அதிரடிப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.