பஹ்ரைனில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சர்வதேச வங்கிக் கணக்கை வழங்க நடவடிக்கை!
பஹ்ரைனின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (LMRA) பஹ்ரைனில் வேலைக்காக நாட்டின் விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சர்வதேச வங்கிக் கணக்கை (IBAN- International Bank Account Number) வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இது இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை தூதரகம் தெரிவிக்கின்றது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இந்த சர்வதேச வங்கிக் கணக்குகளை அறிமுகப்படுத்துவது, தொழிலாளியும் முதலாளியும் பணம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதையும் சரியான பரிவர்த்தனைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களது ஊதியத்தை வங்கிகள் மூலம் வழங்குவதையும், ஊதியம் தொடர்பான வழக்குகளைக் குறைக்கவும் பஹ்ரைன் அரசாங்கம் நம்புவதாகக் கூறப்படுகிறது.
பஹ்ரைன் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (LMRA) www.lmra.gov.bh என்ற இணையதளத்திற்குச் சென்று 00973-17506055 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
வெளிநாட்டு பணியாளர்கள் பஹ்ரைனுக்குள் நுழைந்தவுடன் விமான நிலையத்தில் இந்த சர்வதேச வங்கிக் கணக்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் ஆலோசனைகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.