கோடைகால அலைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் கழிவு நீரில் கொவிட்-19 கிருமி அளவு அதிகரிப்பு
தென்கொரியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கழிவு நீரில் கொவிட்–19 கிருமியின் அளவும் அதிகரித்திருப்பதாகத் தென்கொரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று தெரிவித்தனர்.இந்த நிலை ஆகஸ்ட் மாத இறுதியில் உச்சம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கழிவுநீரில் கொவிட்-19 கிருமியின் அளவை அளவுகோலாகக் கொண்டு அந்நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்பு கணிக்கப்படுகிறது.இந்த அணுகுமுறை 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நடப்பில் உள்ளது.
ஏப்ரல் மாத இறுதிக்கும் ஆகஸ்ட் மாத தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தென்கொரியக் கழிவு நீரில் கொவிட்-19 கிருமியின் அளவு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.தென்கொரியாவில் உள்ள 14 மாநிலங்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தென்கொரியாவில் தற்போது கோடைக்காலம்.இந்நிலையில், கொவிட்-19 அலையால் அந்நாடு பாதிக்கப்பட்டுள்ளது.கிருமிப் பரவல் மெதுவடைவதாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
260,000 கொவிட்-19 நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையைத் தயார்ப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான சிகிச்சை நாடெங்கும் தயார்நிலையில் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.அத்துடன் கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகளும் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 கிருமிப் பரவல் அதிகரிப்பைத் தென்கொரிய அரசாங்கம் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் சூ கியூ ஹோங் கூறினார்.கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏற்றம் கண்டிருப்பதால் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.