சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஏழு சொகுசு வாகனங்கள் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
2018 முதல் 2024 வரை இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 25 கோடி ரூபா வரி வருமான இழப்பினை ஏற்படுத்திய நாற்பது கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 வாகனங்களை சுங்கத்திற்கு எடுத்துச்செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரகசிய மற்றும் புலனாய்வுப்பிரிவு சமர்ப்பிப்புகளை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதவான், சட்டவிரோத வாகன இறக்குமதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்யுமாறு மேலும் உத்தரவிட்டார்.
2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மூன்று ஆங்கில எழுத்துகள் கொண்ட பதிவு இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற போதிலும், கணினியில் உள்ள தரவுகள் நீக்கப்பட்டு, இந்த சொகுசு வாகனங்கள் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற குறைந்த பெறுமதியான வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. .
பதுளை, வாரியபொல, பலாங்கொடை மற்றும் வத்தளை பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், 2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் அறிவித்துள்ளது.