அமெரிக்காவில் ‘டெபி’ புயலால் கரையோர மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ; அறுவர் பலி!
அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களான ஜியார்ஜியா, சவுத் கரோலினா ஆகியவற்றில் ‘டெபி’ புயலால் பெய்த கனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்குள்ள சார்ல்ஸ்டன், சவானா போன்ற பல நகரங்களில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 7) பெய்த மழை பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று தேசிய சூறாவளி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புளோரிடாவில் ஐவர், ஜியார்ஜியாவில் ஒருவர் என ‘டெபி’ புயலால் அறுவர் உயிரிழந்துள்ளனர்.
தென்கிழக்குப் பகுதியிலும் மத்திய அட்லாண்டிக் பெருங்கடலின் கரையோரப் பகுதிகளிலும் இப்புயலால் பல நாள்களுக்கு வரலாறு காணாத அளவிற்குப் பெருமழை பெய்யுமென அஞ்சப்படுகிறது.
அதிகபட்சமாக 63 சென்டிமீட்டருக்கு மேலான மழை பொழியும் என்று தேசிய சூறாவளி நிலையம் அறிவித்துள்ள நிலையில், நார்த் கரோலினாவிலும் சவுத் கரோலினாவிலும் அவசர நிலையை அவ்விரு மாநில ஆளுநர்களும் அறிவித்துள்ளனர்
கனமழை தொடர்வதால் சுற்றுலா நகரான சவானாவில் பல பயணிகள் தங்குமிடங்களுக்கான முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.
சார்ல்ஸ்டன் நகர மேயர் வில்லியம் கொக்ஸ்வல், புதன்கிழமை காலை (ஆகஸ்ட் 7) வரை ஊரடங்கை விதித்து, அவசரத்தேவை இருந்தாலொழிய யாரும் வெளியில் வரவேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
சார்ல்ஸ்டன் நகரின் மேற்கே உள்ள கொலிடன் கவுன்டி சிறுநகரில் அணை உடையும் வாய்ப்புள்ளதால், அங்குள்ள மக்களை உடனே வெளியேறிவிடும்படி காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.