ஈராக் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க அதிகாரிகள் காயம்
ஈராக்கில் உள்ள ராணுவத் தளத்தில் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஐந்து அமெரிக்க அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.அமெரிக்க அதிகாரிகள் அந்தத் தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
சென்ற வாரம் ஹமாஸ், ஹிஸ்புல்லா போராளிக் குழுக்களின் மூத்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து, ஈரானும் அதன் நட்பு நாடுகளும் நடத்தக்கூடிய புதிய உத்தேசத் தாக்குதல்களுக்கு மத்தியக் கிழக்கு ஆயத்தமாகிவரும் நிலையில், அண்மைத் தாக்குதல் நடந்துள்ளது.
ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள அல் அசாட் ஆகாயத் தளத்தில் இரண்டு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக ஈராக்கியப் பாதுகாப்புத் தகவல்கள் தெரிவித்தன. அந்த ஏவுகணைகள் ஆகாயத் தளத்தினுள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிராக ஈரான் விடுத்த மிரட்டல்களுக்கும் அந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க அதிகாரிகள், காயமடைந்த அமெரிக்கர்களில் ஒருவர் மிக மோசமாகக் காயமுற்றிருப்பதாகக் கூறினர். காயமடைந்தோரின் எண்ணிக்கை மாறக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“ஆகாயத் தளத்தின் அதிகாரிகள் தாக்குதலுக்குப் பிந்திய மதிப்பீட்டை மேற்கொள்கின்றனர்,” என்று அதிகாரிகளில் ஒருவர் கூறினார்.
சென்ற வாரம், பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாசின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கொல்லப்பட்டார்.அதன் பிறகு, இஸ்ரேலைப் பழிவாங்கப்போவதாக ஈரான் மிரட்டியது. அந்தக் கொலைக்கு இஸ்ரேல் காரணம் என்று ஈரான் குறைகூறியது. இருப்பினும், இஸ்ரேல் அதற்குப் பொறுப்பேற்கவில்லை.