கம்போடியாவில் மோசடி கும்பலிடம் சிக்கிய 14 இந்தியர்கள் மீட்பு…
கம்போடிய நாட்டில் மோசடி கும்பலிடம் சிக்கிய 14 இந்தியர்களை அந்த நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர். தற்போது அங்குள்ள தன்னார்வல அமைப்பின் அரவணைப்பில் அவர்கள் உள்ளனர்.
இந்த சூழலில் இந்திய தூதரகத்தின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். அதோடு நாடு திரும்ப தங்களுக்கு உதவி வேண்டுமென்றும் கோரியுள்ளனர். இவர்கள் 14 பேரும் உத்தர பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இந்திய இளைஞர்கள் ஆன்லைன் மோசடி உட்பட பல்வேறு சட்ட விரோத வேலைகளில் ஈடுபடுத்தும் போக்கு சமீபமாக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு முறையான பணி வழங்கப்படும் என நம்ப வைத்து சைபர் மோசடி சார்ந்த வேலையில் ஈடுபட நிர்பந்திக்க பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மென்பொருள் வல்லுநர்கள் என்றும் தகவல்.
இப்படி அங்கு மட்டும் சுமார் 5,000 இந்தியர்கள் சிக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இந்த மோசடி வலையில் சிக்கிய சுமார் 250 இந்தியர்களை மீட்டதாக இந்திய அரசு தெரிவித்தது. வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.