விசா இன்றி பயணம் மேற்கொள்ள 93 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ள தாய்லாந்து
விசா இன்றி தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ள, 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்குத் தாய்லாந்து அனுமதி வழங்குகிறது.
தற்போது 57 நாடுகளைச் சேர்ந்தோர் மட்டுமே தாய்லாந்துக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.புதிய திட்டம் ஜூலை 15ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
குறுகிய கால வர்த்தகம் காரணமாகவும் பயணம் மேற்கொள்வோருக்கு இத்திட்டம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தகவலைத் தாய்லாந்தின் உள்துறை அமைச்சு வெளியிட்டது.
விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் திட்டத்தின்கீழ் தாய்லாந்துக்குச் செல்பவர்கள் அந்நாட்டில் அதிகபட்சம் 60 நாள்களுக்குத் தங்கலாம்.தாய்லாந்தின் சுற்றுப்பயணத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கை, ஜூலை 7ஆம் திகதி நிலவரப்படி (கடந்த ஆண்டு அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில்) 35 சதவீதம் ஏற்றம் கண்டது.
இவ்வாண்டு ஜூலை 7ஆம் திகதி நிலவரப்படி தாய்லாந்துக்கு 18.2 மில்லியன் வெளிநாட்டினர் பயணம் மேற்கொண்டனர்.
இவ்வாண்டு தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டினரில் சீனா, மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.