பார்சிலோனாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
ஸ்பெயினின் பார்சிலோனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் இறங்கி, சுற்றுலாப் பயணிகள்மீது தண்ணீர் துப்பாக்கிகளைக் கொண்டு தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் ‘சுற்றுலாப்பயணிகளே உங்கள் நாட்டுக்குச் செல்லுங்கள்’ என கோஷமிட்டும் போராட்டம் நடத்தினர்.
கடந்த வாரஇறுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பார்சிலோனாவில் இருக்கும் பிரபலமான சுற்றுலாப் பகுதிகள் வழியாக அணிவகுத்துச் சென்றதைக் கண்டதாக பிபிசி தெரிவித்தது.
“பார்சிலோனா விற்பனைக்கு அல்ல”, “வீட்டிற்குச் செல்லுங்கள்” போன்ற சுற்றுலா எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக அது மேலும் கூறியது.
உள்ளூர் மக்கள் தண்ணீர் துப்பாக்கிகளைக் கொண்டு உணவருந்திக் கொண்டிருந்த சுற்றுப் பயணிகள்மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதையும் பெரும்பாலான சுற்றுப்பயணிகள் அந்த இடத்தைவிட்டு உடனடியாக வெளியேறுவதையும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பிபிசி வெளியிட்ட காணொளியில் காண முடிந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 2,800 பேர் காலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பார்சிலோனாவில் குறிப்பாக நகரின் மையப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் சுற்றுப் பயணிகளுக்கான குடியிருப்புகள் இருப்பதாகவும் இதனால் வீட்டு வாடகை விலை உயர்ந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்ததாக பிபிசி கூறியது.