ஈரான் அதிபர் தேர்தல்: சீர்திருத்தவாதியான பெஸெஷ்கியான் வெற்றி
ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதி மசூட் பெஸெஷ்கியான் வெற்றி பெற்றுள்ளார். பெஸெஷ்கியான் 16 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மிகவும் பழைமைவாதக் கொள்கைகளைக் கொண்ட சயீத் ஜலிலி 13 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
ஈரானின் உள்துறை அமைச்சு இத்தகவல்களை வெளியிட்டது. சனிக்கிழமையன்று (ஜூலை 6) நடைபெற்ற இரண்டாம் சுற்றுத் தேர்தலில் பெஸெஷ்கியான் வெற்றிபெற்றார்.சுமார் 30 மில்லியன் பேர் தேர்தலில் வாக்களித்தனர். 49.8 சவீத வாக்காளர்கள் வாக்களித்ததாக ஈரானின் தேர்தல் ஆணையப் பேச்சாளர் மொஹ்சென் எஸ்லாமி தெரிவித்தார்.தமது ஆதரவாளர்களுக்கு பெஸெஷ்கியான் நன்றி தெரிவித்துக்கொண்டார். தம் மீதுள்ள அன்புக்காகவும் நாட்டிற்கு உதவுவதற்காகவும் ஆதரவாளர்கள் தமக்கு வாக்களித்தாக அவர் சொன்னார்.
ஈரானின் முந்தைய அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே நடத்தப்பட்டது. ரைசி, மிகவும் பழைமைவாதக் கொள்கைகளைக் கொண்டவர் ஆவார்.
சென்ற வாரம் நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் குறைவான விகிதத்தில் மக்கள் வாக்களித்தனர். ஈரானின் தலைமை ஆயத்தோலா அலி காமேனி, தேர்தலின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி இரண்டாம் சுற்றில் கூடுதலானோர் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
காஸா போர், ஈரானின் அணுவாயுதத் திட்டம் குறித்து அந்நாட்டுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்துவேறுபாடுகள், பல தடை உத்தரவுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானின் பொருளாதாரம் குறித்து உள்நாட்டில் காணப்படும் அதிருப்தி ஆகியவற்றின் தொடர்பில் வட்டார அளவில் பதற்றம் அதிகரித்துள்ள வேளையில் தேர்தல் நடைபெற்றது.
முதல் சுற்றுத் தேர்தலில் திரு பெஸெஷ்கியான், 42 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக ஜலிலிக்கு 39 சதவீத வாக்குகள் கிடைத்தன.ஈரானின் தேர்தல் ஆணையம் இந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டது.
பெஸெஷ்கியான், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட ஒரே சீர்திருத்தவாதி ஆவார்.
ஈரானில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கும் 61 மில்லியன் பேரில் 40 சதவீத்த்தினர் மட்டுமே முதல் சுற்றில் வாக்களித்தனர். 1979ஆம் ஆண்டு அந்நாட்டில் நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு அதிபர் தேர்தலில் இவ்வளவு குறைவான விகிதத்தில் மக்கள் வாக்களித்ததில்லை.