பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: போட்டியிடும் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள்!
650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள், கறுப்பினத்தவர்களுக்கு முன்பை விட அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக பேர் போட்டியிடும் தேர்தலாகவும் இது மாறியுள்ளது. உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் களத்தில் உள்ளனர்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் சூழல் உள்ளதால், இலங்கை தமிழர்களின் உரிமைகள் காக்கப்படும் என மூத்த வழக்கறிஞர் கணநாதன் தெரிவித்தார். பிரிட்டனில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் பிரதிநிதியாக தமிழர்களின் குரல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒலிப்பது காலத்தின் கட்டாயம்.