நைஹீரியாவில் தற்கொலைத் தாக்குதல்: குறைந்தது 18 பேர் உயிரிழப்பு
குவோசா நகரில் நடைபெற்ற திருமண விழா, இறுதிச் சடங்கு ஆகியவற்றில் கலந்துகொண்டோரையும் மருத்துவமனையில் இருந்தோரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நைஜீரியாவில் ஜூன் 29ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் இறந்தனர். பல இடங்களில் வெடிகுண்டு வெடித்ததில் கிட்டத்தட்ட 30 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இறந்தோரில் சிறுவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர் என்று நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் பல இடங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதல்களைப் பெண்கள் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
குவோசா நகரில் நடைபெற்ற திருமண விழா, இறுதிச் சடங்கு ஆகியவற்றில் கலந்துகொண்டோரையும் மருத்துவமனையில் இருந்தோரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
போர்னோ மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாகப் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.இதன் காரணமாக அந்த மாநிலத்தில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர்.அதுமட்டுமல்லாது, மில்லியன்கணக்கானோர் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.
நைஜீரிய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அங்குள்ள பயங்கரவாத அமைப்பு பலவீனமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், பொதுமக்களையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து அந்தப் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்களின் காரணமாகப் பல உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.ஜூன் 29ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.