இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
2024 – 2026 காலப்பகுதியில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையை மேற்கொள்ளும் பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் வகையில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அதற்காக 2017-2020 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தங்களுடன் கூடியதாக 2024-2026 வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, உயர்கல்வித் துறையில் அபிவிருத்தி மற்றும் புத்தாக்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாற்றிக் கொள்ளல், ஒருங்கிணைந்த ஆய்வுகளை நடாத்துதல், இருதரப்பினரின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை ஊக்குவித்தல், இருதரப்பினராலும் உடன்பாடு எட்டப்படுகின்ற துறைகளில் முதலாவது பட்டப்படிப்பு அல்லது பட்டப்பின்படிப்புக்களுக்கான புலமைப்பரிசில் பரிமாற்றம் மற்றும் இருநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே மாணவர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் பரிமாற்றம் போன்ற நோக்கங்களுக்காக 2024-2026 காலப்பகுதி வரை செல்லுபடியாகும் வகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் வியட்நாம் சோசலிச குடியரசுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.