ஆஸ்திரேலியா – பெருந்தடுப்பு பவளப்பாறைகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும்: யுனெஸ்கோ
ஆஸ்திரேலியாவின் ‘பெருந்தடுப்பு (கிரேட் பேரியர்)‘ கடலடிப் பாறைத்திட்டுகளைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (யுனெஸ்கோ) மரபுடைமைக் குழு ஆஸ்திரேலிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.
அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் கடலடிப் பாறைத்திட்டுகளைப் பாதுகாக்க மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்துத் தெரிவிக்குமாறு ஆஸ்திரேலியாவை யுனெஸ்கோ கேட்டுக் கொண்டது. ஆனால்,’பெருந்தடுப்பு (கிரேட் பேரியர்)‘ கடலடிப் பாறைத்திட்டுகளை அழியும் அபாயமுள்ள பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட மாட்டாது என்றும் வரைவு அறிக்கை ஒன்றில் யுனெஸ்கோ தெரிவித்தது.
திங்கட்கிழமை (ஜூன் 24) பிற்பகுதியில் வெளியான இந்த அறிக்கையை ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல், நீர்த் துறை அமைச்சர் தன்யா பிலிபர்செக் “பெரிய வெற்றி” எனக் கூறி வரவேற்றார்.
“நாங்கள் பருவநிலை மாற்றம், உள்ளூர் நீரின் தரத்தை மேம்படுத்துதல், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பு உயிரினங்களைக் கையாள்வது, பவளப்பாறைகளைப் பாதுகாக்கும் திட்டங்களில் குறிப்பிடத்தக்க தொகையை முதலீடு செய்வது ஆகியவற்றில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று அமைச்சர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
ஆனால் யுனெஸ்கோவின் இந்த முடிவு, அடுத்த மாதம் புதுடில்லியில் நடைபெறவுள்ள உலக மரபுடைமைக் குழுமத்தின் கூட்டத்திற்கு வழிகாட்டுதலாகவும் உலகின் மிகப்பெரிய பவளப் பாறைகள் அமைப்பு தீவிர அச்சுறுத்தலில் உள்ளது என்பதை எச்சரிப்பதாகவும் இருக்கிறது என்றார் அவர்.
அவசர, நீடித்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆஸ்திரேலிய அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.
பவளப்பாறைகளைச் சுற்றியுள்ள நீரின் தரத்தை மேம்படுத்துதல், செவுள் வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்தலுக்குக் கட்டுப்பாடுகள் உட்பட ஆஸ்திரேலியா எடுத்த சில நடவடிக்கைகளை யுனெஸ்கோ வரைவு அறிக்கை வரவேற்றது.