வடகொரியா மீதான தடைக் கண்காணிப்புக்கு நியூசிலாந்து கூடுதலாகப் பங்களிக்கும் ;பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன்
வடகொரியா மீதான தடை உத்தரவுகளைக் கண்காணிப்பதில் நியூசிலாந்து கூடுதலாகப் பங்களிக்கும் என்று நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) கூறியுள்ளார்.
முதல்முறையாக நியூசிலாந்துத் பாதுகாப்புப் படைக் கப்பல்களை அனுப்ப உறுதியளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.மேலும் இப்பணிக்காகக் கூடுதல் விமானங்கள் அனுப்பப்படும் என்று கூறிய அவர், 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் தடைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்கு இவ்வாறு ஆதரவு வழங்கப்படும் என்றார்.
“இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை, விதிகளின் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்குமுறை ஆகியவற்றை ஆதரிக்கும் வண்ணம், பாதுகாப்பு தொடர்பான கூட்டு முயற்சிகளுக்கு நியூசிலாந்து அளிக்கும் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது,” என்று லக்சன் கூறினார்.
அரசதந்திர ரீதியிலும் ராணுவப் பங்களிப்பு மூலமாகவும் அனைத்துலகச் செயல்பாடுகளில் பங்களிப்பை அதிகரிக்க நியூசிலாந்து அரசாங்கம் முயல்கிறது. இம்மாதத் தொடக்கத்தில், தென்கொரியாவில் உள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத் தளபத்தியத்திற்குக் கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பவிருப்பதாக நியூசிலாந்து அறிவித்தது.