மேற்கு கரையில் சுகாதார நெருக்கடி: WHO எச்சரிக்கை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் கடுமையான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை அன்று (ஜூன் 14) எச்சரித்தது.
அவ்வட்டாரத்தில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள், வன்முறை, சுகாதார உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் ஆகியவை சுகாதாரப் பராமரிப்புகளை சீர்குலைத்து வருகின்றன.
மேற்கு கரையில் உள்ள பொதுமக்களை பாதுகாக்கவும் சுகாதாரப் பராமரிப்பை ஒழுங்குப்படுத்தவும் உடனடியாக ஆக்ககரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநாவின் சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டது.
அக்டோபர் 7ஆம் திகதி காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து கிழக்கு ஜெருசலம் உட்பட மேற்கு கரையில் வன்முறை அதிகரித்துள்ளதை அது சுட்டிக்காட்டியது.ஜூன் 10ஆம் திகதி வரையில் 126 குழந்தைகள் உட்பட 521 பாலஸ்தீனர்கள் இதில் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய துருப்புகளாலும் அங்கு குடியேறியவர்களாலும் மேற்கு கரையில் குறைந்தது 545 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.மேலும் 800 குழந்தைகள் உட்பட 5,200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக நிறுவனம் கூறியது.இது, ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சுகாதார வசதிகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
1967ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரையில் ஓராண்டுக்கு மேலாக வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே காஸாவில் எட்டு மாதங்களுக்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து, வன்முறை அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி எதிர்பாராதவிதமாக இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் வெடித்தது. இதன் விளைவாக 1,194 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று இஸ்ரேலின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களைக் கணக்கிட்டு ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஹமாஸ் போராளிகள் 251 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இவர்களில் 116 பேர் இன்னமும் காஸாவில் இருக்கின்றனர். இவர்களில் 40 பேர் இறந்துவிட்டனர் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறி வருகிறது.
இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தியதில் காஸாவில் குறைந்தது 37,266 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று காஸா வட்டார சுகாதார அமைச்சு தெரிவித்தது.