இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் பிரதமர் இடையே இலங்கை ஜனாதிபதி முக்கிய சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புது தில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப்பிரமாண நிகழ்விற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், இந்த செயற்பாடுகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இந்தியாவின் புதுடெல்லியில் இன்று(10) நடைபெற்றுள்ளது.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இதன்போது உறுதியளித்தார்.
இலங்கை – பங்களாதேஷ் இடையில் பயணிகள் படகு சேவையை மேற்கொள்வது குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பங்களாதேஷ் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதுடன், மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையில் தேர்தல் நடைபெற இருப்பதால், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் மாநாட்டில் பங்குபற்றுவார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தலின் பின்னர் பங்களாதேஷுக்கு விஜயம் செய்வதாக பங்களாதேஷ் பிரதமரிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.