ஏமனில் அமெரிக்கா – பிரிட்டிஷ் படையினர் கூட்டு வான்வழித் தாக்குதல்: 16 பேர் பலி!
ஏமனில் அமெரிக்க – பிரிட்டிஷ் படையினர் கூட்டு விமானத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏமன் தலைநகர் சனா மற்றும் ஒரு முக்கிய துறைமுக நகரம் உட்பட அந்நாட்டின் பல்வேறு தளங்களில் நேற்று இரவு துவங்கி இன்று அதிகாலை வரை அமெரிக்கா – பிரிட்டிஷ் படையினர் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் 16 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சேனல் அல்-மசிரா வெளியிட்டுள்ள தகவலில், டேஸ் நகரில் உள்ள தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பலர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பிராந்திய ஊடகங்களின் சுயாதீனமான விசாரணையில் இந்த தகவலை உடனடியாக உறுதிப்படுத்த இயலவில்லை.
அமெரிக்கா, பிரிட்டிஷ் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு செல்லும் அனைத்து கப்பல்களையும் ஹுதி கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக கடந்த ஜனவரி முதல் ஏமனில் உள்ள ஹுதி இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும் இந்த தாக்குதல் ஹுதி கிளர்ச்சியாளர்களை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை.